ஏகாந்த நாதனின் தூதர் முஸ்தஃபா
எம்மான் நபிகளின் பேரராகிய
வாகான தஸ்தகீர் கௌதுல்அஃழமே
வள்ளல் முஹிய்யித்தீன் குருநாதரே
                                                                                             (ஏகாந்த நாதனின்)

பாரசீ கம்மெனும் ஈரானிலே
பைம் பொழில் ஆர்த்திடும் ஜீலானெனும்
பதியிலே ஃபாத்திமா அபுஸாலிஹின்
பாசமார் மைந்தரே குருநாதரே
                                                                                             (ஏகாந்த நாதனின்)

அப்துல்காதிர்எனும் மேம்பெயரையே
அழகுடன் சூடியே தீனோர்களின்
அன்பிலே நீந்தியே மிளிர் வோரே
ஆன்றமெய் ஞானியே குருநாதரே
                                                                                             (ஏகாந்த நாதனின்)

மெய்மறை கூறிடும் மாநீதியும்
மாணல் முஹம்மதரர் நேர்பாதையும்
வையகம் மீதிலே வழுவாது
வாழ்ந்து மாண் பெய்திய குருநாதரே
                                                                                             (ஏகாந்த நாதனின்)

மின்னிடும் அழகுயர் நட்சத்திரங்களாம்
முன்னவர் நேசமார் வலிமார்களின்
அன்னவர் நடுவிலோர் நிலவாக
அமைந்து நின்றிலங்கும் குருநாதரே
                                                                                             (ஏகாந்த நாதனின்)

இதயமார் அன்பிலே யாம்பாடும்
இசையிலே நன்மணம் தருவோரே
பதிபகு தாதிலே அரசாளும்
பேருயர் ராஜரே குரு நாதரே
                                                                                             (ஏகாந்த நாதனின்)

பாலகர்கள் மஹ்மூது ஹுஸைன் பாடலை
பாடிடும் எங்கள் நாட்டம் நிறைவேறவே
வேண்டிடும் ஷைஹே யாமுஹிய்யித்தீன்
சேர்ப்பீரே சுவனமே கௌதுல் அஃழமே
                                                                                             (ஏகாந்த நாதனின்)

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.