மவ்லாய ஸல்லி வ சல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக க்ஹைரில் க்ஹல்கி குல்லிஹிமீ...

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றுரைத்து
வல்லோனை யாம் புகழ்ந்து வரவேற்போம் ரமழானை...

செளம் தந்த நபியுல்லாஹ்வை புகழ்ந்து எம் மனம் ஆற
உண்டாகும் ஷோபணமாம் வரவேற்போம் ரமழானை...

உம்மத்தின் திங்கள் என்றே உரைத்தார் நபியவர்கள்
விருந்தாளி நெருங்கும் கணம் வரவேற்போம் ரமழானை...

வரிசை மிக்க முற்பதினை இனிதே எம் அகம் குளிர
முரண்பாடு இல்லாமல் வரவேற்போம் ரமழானை...

ஒளி இலங்கும் முற்பதினை முக்கூராய் பங்கிட்டு
இனிதே கரம் சேர்த்தார்கள் அருமை முஹம்மதனார்.

முற்பத்தில் துய்யோனாம் கருணை கொண்ட ரஹ்மானின்
ரஹ்மத்தை வேண்ட சொன்னார் வேண்டி மடங்குகிறேன்...

ரஹ்மத் எனும் நற்சொல்லுக்கு விளக்கம் ஒன்றை யான் கேட்க
அல்லாஹ்வே மொழி புகழ்ந்தான் ரஹ்மத் என்றால் என்னவென்று..

இப்பத்திலும் எப்பத்திலும் முந்நூற்றறு-பத்தாரிலும்
நபியே எம் ரஹ்மத் என்று உணர்வோமே அகமகிழ...

தொடரும் இரண்டாம் பத்தில் பாவ பிழை நோய் அகழ
கேட்க சொன்னார் கண்ணீர் மழ்க உயர்வான தெளபாவை...

கிட்டாத பொக்கிஷமாம் ஹபீபுல்லாஹ் ரஹ்மத்தினை
முற்பத்தில் கிட்டிய பின் ஜொலிப்புடனே நான் இருந்து...

நபியுல்லாஹ் துணை கொண்டு ஈன்றெடுத்த தாய் தந்தைக்கும்
கேட்போமே பிழை பொறுப்பான், அர்ஹமூர் ராஹிமீனாம்..

முடிவாகும் அந்தப்பத்தில் படைத்தோனாம் ரப்பிடமே
அண்டம் விட்டு மீள்ந்து செல்லும் கடை நாளை எண்ணி கொண்டு...

ரஹ்மானின் கிருபை நாடி கோர சொன்னார் மேல் நஜாத்தை
வழிந்தோடும் கண்ணீரும் அனைத்திடுமோ மாக்கனலை...

எம் பெருமான் நபிகளோடு யாம் துலங்க நாடுகிறேன்
ஆவலுடன் பாடுகிறேன், நபியே எனை பற்றி கொள்வீர்...

எவரை யாம் நேசித்தோமோ அவருடனே இருப்போம் என்று
நன்மை ஷோபணம் கூற மலர்ந்தோமே உம்மத்துக்கள்...

சிறப்பான கதுரினிலே கொண்டு வந்த ஜிப்ரயீலும்
வாங்கி கொண்ட பொன்னபியும் படைத்தோனின் நாமம் கொண்டு...

குர்ஆனே குர்ஆனை ராகத்துடன் ஓதும் இந்த
எழில் கொஞ்சும் பூங்குரலை கேட்ட மலாயிக்கத்தும்..

சிறப்பே கனமாய் அமைந்த புனித திங்கள் ரமழானை
வரவேற்போம் வரவேற்போம் சிந்தை குளிர வரவேற்போம்...

இறையோனின் நெருக்கம் எஞ்சும் சிறந்த திங்கள் ரமழானை
வரவேற்போம் வரவேற்போம் அகமகிழ வரவேற்போம்...

ரமழானின் மகிமை கண்டு எமதுள்ளம் மாலை சூட்டி
வரவேற்போம் வரவேற்போம் விழி மலர வரவேற்போம்....

                                                                                                                    by
                                                                                                                                Al-Hafiz Seyed Ismail MAC

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.