வான் மறைச் சோலையில் வள்ளல் நபி பாதையில்
எண்ணிலா துயர் சுமந்த கண்மனிகள்
நம் இஸ்லாத்தில் மனம் பரப்பும் தீன் மலர்கள்

வாய்மையிலே வரலாறு கண்டவர்
கொடை வள்ளலாகி செல்வமெல்லாம் வாரி தந்தவர்
ஓய்வில்லாமல் தீனுக்காக உழைத்தவர்
எங்கள் உத்தமராம் அபூபக்கர் சித்தீக் ஆனவர்
உலகம் போற்றிடும் ரோஜா மலரைப் போன்றவர் (2)
வான் மறைச் சோலையில் வள்ளல் நபி பாதையில்

வாளெடுத்தால் பகை முடிக்கும் வல்லவர் தனி
வாழ்க்கையிலே சாந்தம் கொண்ட மிகவும் நல்லவர்
தோல் கொடுத்த கிலாபத்தை காத்தவர்
நபியின் தோழராகி உமர் கத்தாப் எனச் சிறந்தவர்
நிலவில் பூத்திடும் அல்லி மலரை போன்றவர்
வான் மறைச் சோலையில் வள்ளல் நபி பாதையில்

சாந்தமுடன் அமைதியாக திகழ்ந்தவர் நபி
சர்தாரின் பெயரைச் சொன்னால் அள்ளி தருபவர்
ஏந்துகின்ற இறைமறையை தொகுத்தவர்
தீனின் இனியவராம் உதுமான் உயர் தியாகம் செய்தவர்
கொடியில் கமழ்ந்திடும் முல்லை மலரை போன்றவர்
வான் மறைச் சோலையில் வள்ளல் நபி பாதையில்

போர் களத்தில் வேங்கையாகி வெல்பவர்
ஞானம் பொழிகின்ற அறிவியை போல் அறிவில் சிறந்தவர்
ஆற்றெழுந்தால் இரட்டை வாள் வீச்சாளர்
வீரர் அலியாரவர் அர்ஷின் புலியாக திகழ்ந்தவர்
பார் புகழும் பாரிஜாத மலரை போன்றவர்
வான் மறைச் சோலையில் வள்ளல் நபி பாதையில்

ஹிந்தாவின் சூழ்ச்சிக்கிறையானவர் அவர்
ஹிம்மத்துடன் தீனுக்காக ஷஹீதானவர்
ஹம்ஜாவெனும் வீர சிங்கம் தானவர் எங்கள்
அண்ணல் முஸ்தஃபாவின் சிறிய தந்தையானவர்
அன்றெழுந்த செந்தாமரை மலரை போன்றவர்
வான் மறைச் சோலையில் வள்ளல் நபி பாதையில்

அடிமை தலையில் கட்டுண்ட ஹபஷி அவர்
இறையை அஹதுன் அஹதுன் என்றே துணிந்து சொன்னவர்
கொடுமைகளை தீனுக்காக ஏற்றவர்
பாங்கின் குரல் கொடுக்க நபி அழைத்த பிலால் தானவர்
நீரில் பூத்திடும் நீல மலரைப் போன்றவர்
வான் மறைச் சோலையில் வள்ளல் நபி பாதையில்

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.