விண்மீது நீந்துகின்ற மேகங்களே
வளமான மதீனாவுக் கேகுங்களே
கண்ணான அஹ்மதெங்கள் மாமுஸ்தஃபா
அந்த காஸீம் நபிக்கு ஸலாம் கூறுங்களேன்
எங்கள் காஸீம் நபிக்கு ஸலாம் கூறுங்களேன்

அந்நாளில் அரபகத்து சுடுமணலிலே
அண்ணலவர் நடந்து வரும் வழித்தடத்திலே
தண்ணார்ந்த நிழல் கொடுத்த முகில் குளங்களே
தயை கூர்ந்து எனது ஸலாம் கூறுங்களேன்

மானிடரின் வாழ்வுயர ஒரு மார்க்கமே
மதிதுலங்க குர்ஆனின் தெளிவாக்கமே
தேனினிய மொழியான கனிவர்க்கமே
தந்தவர்க்கு இதய ஸலாம் கூறுங்களேன்
அதை தந்தவர்க்கு இதய ஸலாம் கூறுங்களேன்

பூவையரின் இழிவகற்றப் போராடியே
புகழ்மணக்க அவர் நிலையை மேலாக்கியே
தாவிவந்த பகை படையைத் தூளாக்கிய
தளபதிக்கு இனிய ஸலாம் கூறுங்களேன்
எங்கள் தளபதிக்கு இனிய ஸலாம் கூறுங்களேன்

நெஞ்ச மென்னும் பேழையினில் நிதியானவர்
நேத்திரத்தில் ஒளி வழங்கும் மணியானவர்
நஞ்சுடைய நரகிருந்து மீட்கின்றவர்
நம்மை நஞ்சுடைய நரகிருந்து மீட்கின்றவர்
நாதருக்கு தூய ஸலாம் கூறுங்களேன்
நபி நாதருக்கு தூய ஸலாம் கூறுங்களேன்

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.