அஹ்மது நபியின் அழகிய நூரால் அகிலம் ஒளியாய் ஜொலிக்கும்
எண்ணத்தில் தவழும் அணையா தீபம் ஏகாந்தான் அருளாய் அளித்தான்

நற்குணத்தின் தாயகம் நீங்கள்தான் என்றே நாயனும் நவின்றான் அன்றே
இறையவன் மறைபோல் இனிதாங் குணமாம் இரஸூல் நபியை படைத்தான்

ஆமினாவின் வயிற்றில் ஆற்றல்மிகும் அன்பாளன் அருட்சுடர் நேசரை அமைத்தான்
ரஹ்மத்துலில் ஆலமீன் ராஜரை போற்றி ரஹ்மான் மறையில் புகழ்ந்தான்

அண்ணலே தாங்கள் அவனியில் வந்ததால் நிமலோன் நிலத்தினை அமைத்தான்
ஆதிநபி ஆதம்முதல் ஈஸா வரையில் ஆலத்தை அஹதோன் படைத்தான்

மங்களங்கள் பொங்கிடும் தங்கள் ஒளிமுகத்தை எங்கள் இரு கண்களால் காண
அங்கங்கள் தங்கமாய் இலங்கிடும் தங்களை பங்கங்கள் நீங்கவே பார்க்கணும்

வஞ்சனைகள் சஞ்சலங்கள் வாகாய் நீங்கிடும் வாஞ்சை நபிகள் வந்த நாள்
அஞ்சிடும் நெஞ்சமும் தஞ்சமே தந்திடும் பிஞ்சு மனம் கொண்ட சிங்கம் பிறந்த நாள்

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.