பன்னிரண்டு நாளிதே பதி பிறந்த நாளிதே
மன்னுயிர்களுக்கெல்லாம் மதி பிறந்த நாளிதே

வஞ்சகர்கள் கூடிய மக்கமா நகர்தனில்
கஞ்சஞ் சேற்றலர்ந்ததாய் கதி பிறந்த நாளிதே
நபி பிறந்த போதினில் நலன் குறைந்த நாடிது
தவ மொழிந்து வளம் மிக தன்மை கொண்டு தித்திதே

வரண்டிருந்த வாறுகள் வாரி நீர் நிறைந்தென
இரு கரை புரண்டு நீர் எங்கு மோட வாயதே
பதி பிறந்த போதினில் பாரசீகந் தன்னிலே
அதியெரிந்து வந்த தீ அணைந்த தண்ணல் புதுமையே
வணங்கு தெய்வச் சிலையெலா மசைந்து கீழ் விழுந்தன
குணங்குளிர்ந்த திங்களார் குவலயத்துதித்ததால்
அண்ணலார் பிறந்தனர் அன்று கிஸ்ரா மாளிகை
மண்ணில் வீழ்ந்தழிந்தது வல்லவன்றன் கிருபையால்

மதி பிளந்த மாநபி மண்ணில் வந்த மாமதி
பதியின் மிக்க மாபதி மறைகொணர்ந்த சீர்நபி
அத்தமித்த கதிரவ னான சுத்த சோதியை
வித்தையாக விண்னுயர் மீட்டி வைத்தார் மாநபி
விரலிடை யினின்று நீர் வேகமாக சொரி தர
திரண்டு நின்ற மாதர்கள் தேக சுத்தி செய்தனர்
பார்வையற்ற கண்ணினில் பதிகள் நாதர் துப்பியே
கூர்மையான பார்வையை கூட்டி வைத்தார் எம் நபி

மறை கொணர்ந்த மாநபி வந்து போக வெயிலினை
மறைத்து வந்த மேகந்தம் மாண்பு செப்ப வியலுமோ
விரிகதிர் தன் சோதியின் மிக்க சோதி நாதரின்
அருள் நிழல் தரையினில் அன்று மின்றும் வீழ்ந்திலை
கையை முத்தமிட்டவர் கைகள் நன்கு கமழுமாம்
செய்ய கமலக் கரங்களே தீர நாதர் கரங்களாம்
குகையுள் அபூபக்ரினைக் கொட்டி விட்ட பாந்தலின்
மிகைத்த வலியை நீக்கிடத் தகையர் எச்சில் பூசினர்

புறாவும் சிலந்தி குகையினுள் பறந்த ததுவும் வலையினை
நிறையப் பின்னி நின்றதும் நீத நபியினற்புதம்
வானினின்று ரொட்டியும் மச்சக் கறியும் தட்டினில்
கோனவர்கள் வேண்டிடக் குறையிலாது வந்தன
மறையின் தூதர் ஒட்டகை மறைந்து போன போதினில்
உரைந்திருக்கும் இடம் தனை உறுதியாகக் காட்டினர்
உயர்ந்த தங்க மலையெலாம் உலக நாதர் வறுமையை
அயர்விலாது போக்கிட அழைத்து நின்ற புதுமையே! கையிருந்த கற்களும் கர்த்தனைத் துதித்தன
மெய் சிலிர்க்கும் புதுமைகள் வித்தையன்று சத்தியம்
மரத்தை வாவென்றழைத்தனர் வந்தபோது போவென
சிரத்தை ஆட்டி சென்றது சீர் நபியின் புதுமையே
அக்கரை யிருந்ததோர் அருங்கலை யழைத்ததும்
மிக்க புதுமை நீரினில் மிதந்து வந்ததேயது
ஆடு மாடு கரடியும் அடுங் கொடிய புலிகளும்
ஈடிலாத நாயகர் இரு பதங்கள் பணியுமே

வந்து பகைஞர் சூழவே மண்ணையள்ளி மாநபி
விந்தையாக வீசவே விழி மறைந்துறைந்தனர்
தூதரைப் பிடிக்கவே துரத்தி வந்த புரவியின்
பாதம் மண்ணில் புதைந்தது பரம நாதர் புதுமையே
முகமலர்ந்த முஹம்மதர் அகமலர்ந்த அஹ்மதர்
சகம துய்ய பூரணச் சந்திரன் போல் வந்தனர்
அண்ணலாரே சூரியர் விண்ணகத்தின் முழுமதி
கண் குளிர்ந்த சோதியே எண்ணிறந்த ஒளிமயம்

கற்றிலார் கலைக்கடல் காட்டி வைத்த புதுமையில்
வெற்றி வேதம் அல் குர்ஆன் மேன்மை மிக்க தாகுமே
அண்ணலார் மறைவினோ டற்புதங்கள் மறைந்தன
வண்ணமிக்க திருக் குர்ஆன் மறைந்திடாத வற்புதம்
யுத்த வீரர் தளபதி யுகத்தி னொப்பிற் பெருபதி
எத்திசையு மதிரடி ஈடிலாத வாழ் மதி
வீரமுள்ள வேங்கையும் தீரமிக்க சீயமும்
வீர வீரர் நபிகளின் மேன்மை வீறுக் கஞ்சுமே

சமமதான உயரமும் தனி நிகர்த்த தன்மையும்
அமைவதான சொற்செயல் அமைந்த எங்கள் நாயகம்
உருவிற் பூரணத்தவர் கருத்தில் ஏக பூரணர்
மறுவிலாத வழகினர் மாண்பு நாதரெம்பிரான்
வென் சிவப்பு நிறத்தினர் விரிந்த நயனமுடையவர்
கண்ணிமை யுறைந்தவர் கண்ணிமையும் நீண்டவர்
நாயகத்தின் வேர்வையும் நல்ல முத்த மணிகளாம்
தூய நாவின் நன்மணம் பொய்த்து வீசும் மா மதி

சொற் செயல்கள் நடை உடை தூய வாக்கு மெய்மையும்
வெற்றி மிக்க புதுமையாய் விளிர்ந்ததுண்மை உண்மையே
ஈருகத்தின் நாதராம் இரு கணத்தின் நாதராம்
வீர அறபி அஜமியர் சீர்க்கும் வெற்றி நீதராம்
இறை தூதரில்ல ரேல் இவ்வவ் வுகமுந் தோன்றிலை
மறை தானும் வந்திலை மட்டி மூடரறிவரோ
கற்ற மாந்தர் மாதரும் மற்ற வறிஞர் கவிஞரும்
உற்ற மேதை நாதருக் கொப்பிழந்து போயினர்

மனிதன் தன்னை மனிதனாய் வாழ வைத்த எம்பிரான்
இனிது வாழ நல் வழி இயற்றி வைத்தார் எம் நபி
இறையை காட்டி தந்தவர் நிறைய ஞான மீந்தவர்
மறையை தந்து மாந்தராய் வாழ வைத்த மன்னவர்
சாதி பேத மில்லையென் றாதி வேத மோதிடுந்
தூது தன்னை கவிகையின் நாதர் கூறி பூந்தனர்
இறை தூதர் மனிதரே எனினும் மனிதர் அல்லவே
நிறைய விண்ணும் மண்ணெல்லாம் நின்று பணியும் தேனனர்

நபிகள் நாதர் பெருமையை நவில யார்க்கும் முடியுமோ
பாபம் பேசும் கூட்டங்கள் பழி சுமந்திறக்குமே
நாயகத்தை புகழ்ந்திடா வாய்கள் ஊமை வாயடா
சீய நபியை சீயெனின் தீய நரகன் பேயடா
நாயகத்தின் எதிரிகள் நைந்து செத்த வாரெலாம்
மாயக்கண்கள் கண்டுமே மதி மருண்டு போயின
நாயகத்தின் பொருட்டினால் நாயகத்தை புகழ்ந்திடா
தீய பேய்கள் கூட்டத்தைத் தீர்த்தருள்வாய் நாயனே

எங்கள் தூய நாதரே உங்களன்பில் திளைத்திட
இங்கு மங்கும் காத்துமே எம்மை மன்னித் தருளுவீர்
தூய வாழ்வும் வளமதும் காய ஆத்ம சுகமதும்
நேயமிறையின் பெற்று நாம் நிதமும் வாழ அருளுவீர்
பாடித்தங்கள் பங்கய பதம் பணிந்த பேரராம்
நாடும் கலீல் அவுனுக்கு நாளும் நலம் நல்குவீர்
தூயன் விண்ணவர் சலாத் தும் சலாமும் கூறினர்
தூய நம்பிக்கை யுளிர் சொல்க ஸலாத்தும் சலாம்
பாடும் இந்த பாவிக்கும் செவி மடிக்கும் அன்பர்க்கும்
பாச நபியின் நேசத்தை பரிசளிப்பாய் நாயனே

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.