எங்கள் நபிகள் திரு மரபில் இலங்கியுதித்த பேரொளியே!
பொங்கும் ஞான ஆழியிலே பூத்துக் எழுந்த பெட்டகமே!
கங்கை வளரும் பாரதத்தில் கலையை வளர்க்க வந்தோரே!
சங்கை மிகுந்த குத்புல் ஹிந்த் சர்தார் வலியே நாயகமே!
அஜ்மீர் அரசாளும் ராஜா - எங்கள் கரீப் நவாஸே ஹாஜா

தளிர்க்கும் தங்கள் சோலையிலே தண்ணீர் பாய்ச்சும் வேளையிலே
பழக்கம் இல்லா ஒரு துறவி பக்கம் அழைத்துப் பார் என்று
விழிக்கு நீரே இரு விரலை விரித்துக் காட்ட அவற்றிடையே
கலக்கமின்றி பலவுலகை கண்டு தெரிந்த காஜாவே

உதுமான் ஹாரூனை உயர் குருவாய் உயரிய ஞானம் பயிற்றுவிக்க
மதீனா சென்று ரவ்ழாவில் மலர் விழி சற்றே அயர்ந்திருக்க
மதிபோல் நாயகம் எழுந்தருளி மகனே பாரதம் செல்கவென
பதிவிட்ட கன்று இஸ்லாத்தின் பயிரை விளைக்க வந்தோரே

தொண்ணூறு இலட்சம் மனிதர்களை தூய இஸ்லாத்தில் சேர்த்து
எண்ணற் கரிய கராமத்தும் இறைவன் நெறிக்காய் தினம் புரிந்து
பின்னால் ஞானம் நிலைத்திருக்க பெரியார் பலரை உருவாக்கி
அன்னை எனவே திகழ்கின்ற அன்பே அஜ்மீர் நாயகமே!

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.