வஸீலா என்பது நல்லமல்களையோ நல்ல மனிதர்களையோ நல்ல மனிதர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களையோ இறைவன் சமூகத்தில் முன்னிலைப்படுத்தி வைத்து அவர்களின் அல்லது அவைகளின் பொருட்டால் தனது நாட்டம் நிறைவேறுவதை ஆதரவு வைத்தலாகும்.

நல்லமல்களை வஸீலாவாக்குவதற்குரிய ஆதாரம்

மூன்று நபர்கள் ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கையில் மழைப் பிடித்துக் கொண்டது. உடனே அருகிலுள்ள ஒரு மலைக் குகைக்குள் ஒதுங்கினார்கள். சிறிது நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு வந்து அவர்கள் தங்கியிருந்த குகையின் வாசலை நன்றாக அடைத்துக் கொண்டதால் வெளியேற வழியில்லாமல் திகைத்து நின்றனர். அப்போது நாம் ஒவ்வொருவரும் தத்தமது வாழ்க்கையில் செய்த நல்லமல்களை இறைவன் சமூகத்தில் எடுத்துக்கூறி அவைகளை வஸீலாவாக்கி துஆ செய்வோம் என்று முடிவு செய்தார்கள்.

அதன்படி முதலாமவர் கூறினார் : இறைவா! எனக்கு வயோதிகமான பெற்றோர்களும் பல சிறு குழந்தைகளும் இருந்தனர். ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் பாலைக் கறந்து என் பெற்றோர்களுக்கு கொடுத்த பின்புதான் குழந்தைகளுக்குக் கொடுப்பது என் வழமையாக இருந்தது. ஆனால் ஒருநாள் வீடு திரும்ப தாமதமாகி விட்டது. வீடு வந்து சேர்ந்தவுடன் அவசரஅவசரமாக பாலைக் கறந்து பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு என் பெற்றோர்களிடம் சென்றேன். ஆனால் அவர்களோ உறங்கிவிட்டார்கள். அவர்களை எழுப்பிக் கொடுத்து விடலாம் என்று பார்த்தால் அவர்களின் உறக்கம் கலைந்து விடுமே என்று எண்ணி எழுப்ப மனமில்லாமல் அபப்டியே பால் பாத்திரத்தை ஏந்திய வண்ணமே நின்று கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய பச்சிளம் குழந்தைகளோ என் காலைச்சுற்றி கொண்டு பசியின் கொடூரம் தாங்காமல் பாலைக் கேட்டுக் கூச்சலிட்டனர். அப்படியிருந்தும் என் பெற்றோர்கள் அவர்களாகவே விழித்து பாலை அருந்தட்டும். அதன் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் பால் பாத்திரத்தை கையில் ஏந்தியவனாய் ஸுப்ஹு வரை நின்றேன். இந்த நற்காரியத்தை உன் திரு முகத்திற்காக (திருப்பதியைப் பெறுவதற்காக) செய்தேன் என்பதை நீ நன்கு விளங்கியிருக்கிறாய். ஆகவே அந்த நற்செயலை முன்னிலைப்படுத்தி (வஸீலாவாக்கி) வேண்டுகிறேன். என் பிரார்த்தனையை ஒப்புக் கொண்டு இந்த குகையின் வாசலை மூடிக் கொண்டிருக்கும் பாறாங்கல்லை அகற்றி வானம் தெரிகின்ற அளவிற்கு இடைவெளியை ஏற்படுத்தித் தருவாயாக என்று பிரார்த்தித்தார். அதன்படி அல்லாஹு தஆலா அவரின் துஆவை கபூல் செய்து அந்தப் பாறாங்கல்லை அகற்றி வானத்தின் வெளிச்சம் தெரியும் அளவிற்கு கிருபை செய்தான்.

இரண்டாமவர் தனது துஆப் படலத்தை துவக்கினார். இறைவா! எனது சிறிய தகப்பனாரின் மகளை மிகவும் அதிகப்படியாக விரும்பினேன். ஆகவே என் இச்சைக்கு இணங்குமாறு கேட்டுக் கொண்டேன். 100 தங்க நாணயங்கள் தந்தாள் இணங்குவதாக கூறினால். உடனே 100 தங்க நாணயங்களை சேகரிக்க முயற்சித்தேன். 100 தீனார் தேறியதும் அதை அவளிடம் கொடுத்து விட்டு காம வேட்கையுடன் அவளின் இரண்டு கால்களுக்குமிடையே அமர்ந்துவிட்டேன். அந்நேரத்தில் அல்லாஹ்வின் அடியானே அல்லாஹ்வைப் பயந்து கொள். எனது கன்னியை அழித்து விடாதே என்றாள். அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவளை விட்டும் எழுந்துவிட்டேன். இறைவா! இந்த நற்செயலை உன் திரு முகத்திற்காக (திருப்பதியைப் பெறுவதற்காக) செய்தேன் என்பதை நீ அறிந்திருந்தால் இந்த பாறாங்கல்லை இன்னும் கொஞ்சம் அகற்றித் தருவாயாக என்றார். அதன்படி இறைவன் அகற்றிக் கொடுத்தான்.

இனி மூன்றாமவர் கூறினார் : இறைவா! 16 ராத்தல் அரிசி தருவதாகக் கூறி ஒருவரைக் கூலிக்கு அமர்த்தினே. அவர் வேலை செய்து முடித்த போது எனக்கு உரிய கூலியைக் கொடு என்றார். அவருக்குச் சேர வேண்டிய அந்தப் பங்கைக் கொடுத்தேன். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். அந்த 16 ராத்தல் அரிசியையும் விவசாயத்தில் போட்டேன். நல்ல இலாபம் கிடைத்தது. அதன் மூலம் ஒரு மாட்டையும் ஒரு இடையனையும் வாங்கினேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் அவர் எம்மிடம் வந்து அல்லாஹ்வைப் பயந்து கொள். எனக்கு அநீதம் செய்து விடாதே. எனக்கு சேர வேண்டிய உடைமைகளைத் தந்துவிடு என்று கூறினார். அப்போது நான் அதோ தெரிகிறதே அந்த மாடும் அதனருகே நிற்கின்ற இடையனும் உனக்குரிய சொத்துதான் நீர் அவைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றேன். அவரோ நான் அவரை கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு என்னைக் கிண்டல் பண்ணாதே என்றார். நான் கிண்டல் பண்ணவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன் என்று கூறி விவரத்தை சொன்னவுடன் அவைகளை எடுத்துச் சென்றுவிட்டார். இறைவா! இந்த நற் செயலை உன் திரு முகத்திற்காக (திருப்பதியைப் பெறுவதற்காக) செய்தேன் என்பதை நீ விளங்கியிருந்தால் அடைப்பட்டிருக்கிற மீதிப் பகுதியையும் சம்பூரணமாக திறக்கச் செய்வாயாக என்றார். உடனே அல்லாஹு தஆலா அந்தப் பாரங்கல்லை முழுமையாக அகற்றி அவர்கள் வெளி வர உதவி செய்தான். (முஸ்லிம் ஷரீப் பாகம் 2 பக்கம் 353 கிதாபுத் திக்ரி, மிஷ்காத் 420 பாபுல் பிர்ரி வஸ்ஸிலாஹ்)

நல்ல மனிதர்களை வஸீலாவாக்குவதற்குரிய ஆதாரங்கள்

1. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தம்மில் இறை நெருக்கம் பெற்றவர் யார் என்பதைக் கவனித்து அவரைக் கொண்டு வஸீலாவாக்கிய நிலையில் இறைவனை வணங்குவார்களே அப்படிப்பட்டவர்கள். (இஸ்ரா 57, ரூஹுல் மஆனி பாகம் 8 பக்கம் 94)

2. "இறைவா! முஜாஹிர்களாகவும் ஏழைகளாகவும் இருக்கின்ற உனது அடியார்களின் பொருட்டினால் விரோதிகளுக்கு பாதகமாக எங்களுக்கு சாதகமாக உதவி செய்தருள்வாயாக" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். (மிஷ்காத் பக்கம் 447, மிர்காத் பாகம் 10 பக்கம் 13)

3. பஞ்சம் ஏற்பட்டுவிட்டால் நிச்சயமாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு மழை தேடுபவர்களாக ஆகியிருந்தார்கள். அதாவது, இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்களின் நபியை உன்னளவில் (வஸீலாவாக) உதவிச் சாதனமாக ஆக்கிப் பிரார்த்திப்பவர்களாக ஆயிருந்தோம். நீ எங்களுக்கு மழை பொழியச் செய்திருக்கிறாய். மேலும் நிச்சயமாக நாங்கள் எங்கள் நபியின் சிறிய தகப்பனாரைக் கொண்டு (முன்னிலையாக்கி) வஸீலாவாக்கி கேட்கிறோம். மழை பொழியச் செய்வாயாக என்று கூறுவார்கள். உடனே மழை பெய்து விடும். (புகாரி பாகம் 1 பக்கம் 137, மிஷ்காத் 132)

4. "தாபிஈன்களில் சிறந்தவர் உவைஸ் என்ற மனிதராகும். அவர்களிடம் சென்று உங்களுக்காக பிழை பொறுக்கத் தேடிக் கொள்ளுங்கள்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தமது தோழர்களுக்கு கூறினார்கள். (முஸ்லிம் 6170, மிஷ்காத் 582)

மறைந்தவர்களை வஸீலாவாக்கலாமா?

"இறைவா! உனது நபியின் பொருட்டாலும் எனக்கு முன்னால் உள்ள நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்களின் பாவங்களை மன்னிப்பாத்து அவர்களின் மண்ணறையை விசாலப்படுத்துவாயாக" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆச் செய்தார்கள். (தபரானீ பாகம் 2 பக்கம் 22 கிதாபுல் ஜனாயிஸ்)

கண்ணியம் பெற்ற பொருட்களை வஸீலாவாக்குவதற்குரிய ஆதாரங்கள்

1. இன்னும் அவர்களுடைய நபி அவர்களிடம் நிச்சயமாக அவருடைய அரசுரிமைக்கு அடையாளமாவது ஒரு பேழை உங்களிடம் வருவதாகும். அதில் உங்கள் இரட்சகனிடமிருந்து ஓர் அமைதியும் மூஸாவின் சந்ததியினரும் ஹாரூன் உடைய சந்ததியினரும் விட்டுச் சென்றதில் மீதமுல்லதும் இருக்கும். அதை மலக்குகள் சுமந்து வருவர். நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது என்று கூறினார். (அல்குர்ஆன் 2:248)

மேற்படி பெட்டியினுள் இருந்த பொருட்கள்

அ. மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களின் ஆடைகள், பாதணிகள், ஊன்று கோல்.
ஆ. ஹாருன் நபியின் தலைப்பாகை.
இ. நபிமார்களின் இதயங்களை கழுவி சுத்தபடுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட தட்டை.
ஈ. நபிமார்களின் உருவப்படங்கள். (தப்ஸீர் ஜலாலைன் பாகம் 1 பக்கம் 38)

இந்தப் பெட்டியை வஸீலாவாக்கி அதன் பரக்கத்தால் போரில் வெற்றியைத் தேடுவார்கள். (ரூஹுல் பயான் பாகம் 1 பக்கம் 385, தப்ஸீர் அபிஸ்ஸுஊத் பாகம் 1 பக்கம் 241)

2. "பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியின் மூலமே போர்களங்கள் அனைத்திலும் வெற்றியடைந்தேன்." என்று காலித் ரலியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார்கள். (முஸ்தத்ரக் பாகம் 3 பக்கம் 299 கிதாபு மஃரிபதிஸ்ஸஹாபா)

திருமுடி வழங்கிய தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மினாவிற்கு வந்து ஜம்ராவில் கல்லெறிந்து விட்டு மினாவில் தங்கியிருக்கும் வீட்டிற்கும் வந்து குர்பானி கொடுத்தார்கள். அதன் பின் முடியெடுப்பதர்க்காக நாவிதரை அழைத்து அவரிடம் தமது வலப்பகுதியைக் கொடுத்தார்கள். பிறகு அபூதல்ஹத்துல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபியை அழைத்து அவர்களிடம் அந்த முடிகளைக் கொடுத்தார்கள். பிறகு இடப்படுதியை நாவிதரிடம் கொடுத்து சிரிக்குமாறு கூறினார்கள். பிறகு அதை அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து இதை மக்களுக்கு மத்தியில் பங்கிட்டு கொடுத்துவிடுவாயாக என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 232)

குறிப்பு : தமது திருமுடிகளை ஸஹாபாக்களுக்கு மத்தியில் பங்கீடு செய்துகொடுக்குமாறு கூறியது அதைவைத்து பரகத் பெற வேண்டும் என்பதற்காகவே அன்றி வேறில்லை என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

திருமுடியை கௌரவித்த ஸஹாபா பெருமக்கள்

ஸைய்யிதுனா முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வபாத்தாகும் நேரத்தில் தாம் பாதுகாத்து வைத்திருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடிகளையும், திரு நகங்களையும், தமது வாயிலும் கண்களிலும் வைத்து தம்மை நல்லடக்கம் பண்ணுமாறு வஸிய்யத் செய்தார்கள். (தாரீகுல் குலபா பக்கம் 185, தாரீகுல் ஆலமில் இஸ்லாமி பக்கம் 49)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திரு முடியின் மூலம் பல போர்களங்களில் வெற்றிவாகை சூடியதாக காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். (முஸ்தத்ரக் பாகம் 3 பக்கம் 299 கிதாபு மஃரிபதிஸ் ஸஹாபா)

குறிப்பு : நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியை ஸஹாபிகள் எந்த அளவுக்கு கௌரவித்துள்ளார்கள் என்பதற்கு மேலதிக விவரங்கள் அறிந்துகொள்ள விரும்புவோர் புகாரி பாகம் 1 பக்கம் 29 கிதாபுல் உழுவு - பாபுல் மாவுல்லதி என்ற பாடத்தில் பாரதக் கொள்ளவும்.

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2018 kayalislam.com | All Rights Reserved.