அருள்ஞானச் சுடர்வீசும் பகுதாத் நகர்
ஆன்மீக அரசாளும் கௌதுல் அஃலமே
ஜீலான்பதி மீதில் பகலவன் போல்
ஜெனித்தீர்கள் ஜெகமெங்கும் ஒளிவீசவே
ஜெனித்தீர்கள் ஜெகமெங்கும் ஒளிவீசவே
பாலர் பருவத்தில் அற்புதங்கள்
படைத்த்தோனின் அருள்மீது நிகழ்ந்தனவே
பகைவரிடம் மெய்யுரைத்தீர் அதனாலே
கள்வர் கூட்டம் இறைவழியாய் மாறினரே
(அருள்ஞான)
ஈராறு ஆண்டு கடும் தவம் புரிந்தே
இறையோனின் அருள் நேசம் அடைந்தீர்களே
தீன்தீன் முஹம்மதரின் தீனை நிலைநாட்டி
தீனுக்கு உயி ரளித்த முஹியத்தீனே
(அருள்ஞான)
இறைஞான ஆழ்மூழ்கி முத்தெடுக்க
மறைஞான குருவே உம் அருள் வேண்டுமே
உம் திருப்பாதம் எம்தோளில் பதிந்திடவே
வரம் தருவீர் கௌதே எம் குருநாதரே
(அருள்ஞான)
பன்னூறுமுறை உம்மை அழைத்தோம் பணிவாய்
பரிவோடு எமையேற்று உள்ளில் வாரீர்
அகத்தினில் ஈமானின் ஒளியேற்றி
கரைசேர கரம்பிடிப்பீர் குருநாதரே
(அருள்ஞான)
புவி விண்வாழ் மனுஜின்கள் மற்றவைகள்
புகழ்பாடும் குத்பே எம் குருநாதரே
கவிபாடும் உம் அடிமை குறை நீக்கியே
கருணை விழி நோக்கி காப்பீர்களே
(அருள்ஞான)