மன்னரப்துல் காதிரென் முன்
வர வேண்டும் - அவர்
கன்னல் மொழி நான் கேட்டு
உய்ய வரம் பெற வேண்டும்
அகந்தை சிலை சிதைந்தும்
புதைந்தும் மறைந்திடவே
எந்தையுங்கள் விந்தையுறு
கந்த மலர் பாதம் தாரும்
புல்லர்கள் கள்வருக்கும்
பதவி தந்துதவி நின்றீர்
பல்லாயிரம் முறை நான்
அழைத்தும் வரக் காண்கிலேன் ஏன்
சொல்லாற் றொலையா வென்
தீவினை தான் காரணமோ
இல்லையெனில் இன்னதென
சொல்லித் தர கண் முன் வாரீர்
வான் மழைக் காணாத
பயிராக வாடி நின்ற
தீன் பயிர் செழிக்க செய்த
ஸெய்யித் யா முஹ்யித்தீனே
பதம் நிதம் பாடினேன் யான்
தேடி இனும் வாடினே னும்
பதம் தனில் முகம் புதைத்து
இதம் பெற வந்தேயாளும்
மாண்டு மறைந்த இசைப்
பாணன் எழக் காட்டினீர்
மாண்ட என் உள்ளந் தனக்
குயிர் தந்து ஒளிரச் செய்வீர்
கண்டு மொழி கொண்ட
முர்ஷிதுனா நூருல் ஹுதா
ஆண்டு அருள் புரிவீர்
அண்ணல் யா முஹ்யித்தீனே
தரை வாணின் எண்டிசையில்
திரை சூழும் கடல் மடியில்
கரைந்தடிமை யாம் அழைக்க
விரைந்துதவ வருவே னென்றீர்
நரை சூழ மறைகள் ஓதும்
புனித இம் மஜ்லிஸிலே
திரை நீக்கி காட்சி தாரும்
கவ்து யா முஹ்யித்தீனே