சித்தி ஆமினா நாயகியை
சித்தம் குளிரவே நாம் புகழ்வோம்
சத்திய நபியின் மனம் குளிர
நித்திய நலன்கள் நாம் அடைவோம்
வெற்றியின் பேராெளியை
நெற்றிதனில் சுமந்தவர்கள்
அப்துல்லாஹ் நாயகத்தை
அகம் குளிர போற்றிடுவோம்
ஆதம் நபி முதலாக
தலைசிறந்த சந்ததிகள்
இணையில்லா இறைவனையே
சிரம் பணிந்த சிறப்புடையோர்
வழி வழியாய் வந்த ஔி
உம் தேகம் அடைந்ததுவே
எம் இருளை போக்கிடவே
நும் மகவாய் பிறந்ததுவே
ரப்புல் ஆலமீனவன்
திக்ருன்லில் ஆலமீனில்
ரஹ்மதுலில் ஆலமீனை
நுமக்காக வேண்ட செய்தான்
பாலக பருவமதில்
பாசத்தை பொழிந்தவர்மேல்
படைத்தவனே பெருங்கருணை
பொழிந்திடுவாய் பெருமழையாய்
மன்னவனின் தூதுவரை
மணி வயிற்றில் சுமந்தவர்கள்
மாசில்லா மாணிக்கமே
மறை புகழும் மாதாவே
ரஹ்மானி்ன் ரஹ்மத்தை
நும் ரஹ்மே சுமந்ததுவே
கருணையின் வடிவமதே
நும் கருவில் வளர்ந்ததுவே
படைப்பினங்கள் தோன்றிடவே
கருவாக அமைந்தவரை
கருவறையில் சுமந்திடவே
காதிரே தேர்ந்தெடுத்தான்
அன்னையின் காலடியில்
அமைந்தது சுவர்க்கம் என்ற
அண்ணலின் சுகந்த மென்றும்
அன்னையே நும் மடியில்
உம்மி நபி உம்மியவர்
உதடுதிர்த்த உண்மையிதே
உலகமதே அழிந்தாலும்
உம் நினைவு மாறாதே
மரணம் எனை மறைத்தாலும்
மறையாதே புகழ் என்றும்
மறைவில்லா மாநபியை
மகவாக பெற்றதினால்
உம் மகவின் பெயர் மொழிந்தே
இறைவழியில் நுழைகின்றார்
உம் மகவை ஏற்றவறே
முஃமீனாய் மிளிர்கின்றார்
உம் மகவை மெய்பித்தோர்
சித்தீக்காய் புகழ் பெற்றோர்
உம் மகவின் உயர்வழியில்
உயிர் நீ்த்தோர் ஷஹீத்தாவார்
உம் மகவின் பாட்டை தனில்
பயணித்தோர் ஸாலிஹாம்
அண்ணலரை சுமந்தவரே
உம் நிலையை என்னென்போம்
பிறந்தவரில் சிறந்தவரின்
பெற்றோருடன் சுவன்தனிலே
என் பெற்றோரை இணைத்திடுவாய்
பெற்றோரே இல்லானே